திருநெறி
குறிக்கோள்
இறையைப் பற்றி, ஆன்மிகத்தைப் பற்றி சொல்லவேண்டிய எல்லாவற்றையும் நமக்கு முன்னே புகழொடு தோன்றி வாழ்ந்து, இறையொடு ஒன்றிய நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும், ஏனைய அருளாளர்களும் உணர்ந்து, கசிந்து பாடிப் பரவிச் சென்று விட்டார்கள். இனிப் புதிதாகச் சாற்ற வேண்டியது ஏதேனும் உண்டோ?
தமிழரின் வாழ்வும் வாக்கும், பக்தியும் ஆன்மீகமுமாய் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்த பெருநெறியாய் விளங்கி வந்திருப்பது கண்கூடு. நாத்தீகம் பேசி நாத்தழும்பேறியவராலும் மறுக்க முடியாத உண்மை. இறையைப் பற்றிப் “பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்ற திருநாவுக்கரசரின் அறிவுரையை சிரமேற்கொண்டு நாமும் பேசுவோம்..... எதைப் பற்றி? நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும், அருணகிரியாரும், பட்டினத்துப் பிள்ளையும், தாயுமானவரும், இராமலிங்க வள்ளலாரும், ஏனைய மத அருளாளர்களும், மெய் நெறியாளர்களும் உணர்ந்து, துய்த்து, பாடிப் பரவிய பரம் பொருளை, இறையை, இறையருளை ஏத்திப் போற்றிப் பாடிய பாடல்களை செந்நெறியாளர்களின் வாயிலாகக் கேட்போம், தெரிந்து தெளிவோம், சிந்திப்போம், சிந்தித்துப் பேசுவோம்.
Monday, February 25, 2013
Thursday, April 26, 2012
திரு அண்டப்பகுதி - ஒரு பார்வை”,
நம்மெல்லோரையும் இன்று, இங்கு கூட்டுவித்த தென்னாடுடைய சிவனை, எந்நாட்டவர்க்கும் இறைவனை, பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடமிடுந் தில்லைக்கூத்தனைப் போற்றி, வணங்கி "அண்டப் பகுதிக்குச்” செல்வோம்.
திருநெறிய அன்பர்களுக்கு திருவாசகத்தின் பெருமையை நான் சொல்லி தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் சிறிதும் இல்லை என்பதை நான் நன்கறிவேன். இருப்பினும், அறநெறிக்குத் திருக்குறள், அருள்நெறிக்குத் தலைநூல்களில் ஒன்றான திருவாசகம் - இவற்றின் தனித்தன்மையையும், சிறப்பையும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சிந்திப்பதும், செம்பொருள் உணர்ந்தோரின் வாயிலாகக் கேட்பதும் நமக்கு நன்மை சேர்க்கும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது.
அறிவியலும், ஆன்மிகமும் கைகோர்த்து இறை புகழ் பாடும் அதிசயத்தை மாணிக்கவாசகர் படைத்த, சிறப்பாகத் திருஅண்டப்பகுதியிலும், பொதுவாக திருவாசகத்திலும் காண முடிகிறது. ’’இது என்ன?’’ - What is this? என்ற கேள்வியில் ஆரம்பித்து, பகுத்தும் வகுத்தும்(Analysis) ஆராய்வது ஆறிவியல். பகுப்பதும், வகுப்பதும் பொருளின் மூலத்தைத் தேடி, உண்மையை நாடுவதன் முயற்சியே. நான் யார்? - Who am I? என்ற கேள்வியில் ஆரம்பித்து, தொகுத்தும், பெருக்கியும்(Synthesis) ஆய்வது சமயம்(ஆன்மிகம்). தொகுப்பதும், பெருக்குவதும் பொருளின் மூலத்தைத் தேடி, உண்மையை நாடுவதன் முயற்சிதான். ஆக, அறிவியல், சமயம்(ஆன்மிகம்) இவை இரண்டின் குறிக்கோளும் மூலத்தை, உண்மையை அடைவதே. “சச்சிதானந்தம்” சத் + சித் + ஆனந்தம் - சத்தியமாகிய உண்மையை உணர்ந்தால், மெய்யறிவாகிய ஞானம் விளைந்து, வரம்பிலா இன்பமாகிய ஆனந்தத்தில் முடிவுறும்
அறிவியல் தேடலும், ஆராய்ச்சியும் உலகவாழ்க்கையை எளிதாக்கி வசதிகளையும் வாய்ப்புக்களையும் வழங்கியிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. (நிலம், நீர், வான் வழிப் பயணம், தொலை பேசி, தொலைக் காட்சி, கணினி, தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், அறுவைச் சிகிச்சை) Air, Sea & Space Travel, Automobile, Television, Telephone, Computer, Information Technology, Medicine & Surgery, etc இவைகளும் அறிவியலால் உண்மையை நாடித் தேடியதால் விளைந்த “சித்திகள்” தாம். ஆனால் இவை நிலையான, தேய்வும், தொய்வுமில்லாத பரமானந்தத்தைக் கொடுக்கமுடியாது, கொடுக்கவில்லை. வசதியான வசதியின்மையைக் (comfortably uncomfortable) கொடுத்திருக்கின்றன என்பதை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.
அணுவைத் துளைத்ததின் விளைவு, ஆக்கமும் அழிவும்; ஆக்கத்திற்குத் துணை-மின்னணு; மின்னணுவின் வீச்சும் தாக்கமும் உலகவாழ்க்கைக்கு இன்றியமையாததாகத் தோன்றுகின்றன. மின்னணுவைத் துளைத்ததின் விளைவு துன்னணு. துன்னணுவின் பயன் Nano Technology. துன்னணுவின் பகுப்பு நீக்கமற நிறைந்திருக்கும் பரமாணுவான Neutrino. Neutinoவின் பரிமாணம் விஞ்ஞானிகளைத் திகைப்பில் ஆழ்த்தி மெய்மறக்கச் செய்துள்ளது. ஆனால் பரமாணு இந்த இயல்புடையது, இந்த தன்மையுடையது என்று விளக்கமுடியாமல் தவித்து ஒரு பெயரை மட்டும் சூட்டி விட்டார்கள். உண்மையைத் தேடும் பயணம் முடியவில்லை. சச்சிதானந்த நிலையை எட்டவில்லை
ஆன்மிகத் தேடலும் தியானமும் அட்டமாசித்திகளை எய்துவிக்கும். இவைகளும் பரமானந்தத்தை அளிப்பதிலை. சித்திகளைக் கடந்து, புறக்கணித்து, ஒதுக்கித் தள்ளிவிட்டு பயணம் மேற்கொண்ட அருளாளர்கள்தான், சச்சிதானந்தத்தில் திளைத்து, கண்ட அதை விண்ட, திருமுறைகளின் நாயன்மார்களும், திவ்யபிரபந்தத்தின் ஆழ்வார்களும், பட்டினத்தார்களும், தாயுமானவர்களும், வள்ளலார்களும் ஆவார்கள்.
அறிவியல் - விஞ்ஞானம், சமயம்(ஆன்மிகம்) - மெய்ஞ்ஞானம் : பாதைகள் எதிர்மறையாகத் தோன்றினாலும், பயணத்தின் நோக்கும், இலக்கும் ஒன்றுதான் என்பதை விஞ்ஞானிகளும், மெய்ஞ்ஞானிகளும் புரிந்துகொண்டால், உணர்ந்துகொண்டால் மோதல்களும், வீண்வாதங்களும் மறைந்துபோகும்.
திருவாசகத்திற்கு உரை எழுதுதல் கூடாது என்ற மரபு சைவ சமய உலகில் நிலவி வருவது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். காரணம் - மணிவாசகர் எய்திய ஆன்மிக சிகரத்தை எத்தனை பேரால் எட்டியிருக்கமுடியும்? அந்த உயரத்திற்குச் சென்றவர்களால் மட்டுமே மணிவாசகரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உரை செய்யமுடியும் - என்பது ஒரு சாராரின் கருத்து. மொழிப் புலமை மட்டுமே உரைகாண உதவாது; அதற்கு மேலான ஆன்மிக அநுபவ முதிர்ச்சியும் இருந்தால் மட்டுமே திருவாசகத்தின் உட்கிடை இதுவாகும் என்று கூறமுடியும்.
“மகாவித்துவான் தியாகராஜச் செட்டியார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின், முதன்மை மாணவர். இவரை ஓர் அன்பர் பலகாலும் அடுத்து, திருவாசகத்திற்கு உரை எழுதுமாறு வற்புறுத்தி வேண்டிய வண்ணம் இருந்தார். செட்டியார் ’ஆகட்டும்’ என்று தவணை சொல்லிக் கொண்டு வந்தார். ஒரு நாள் செட்டியார் காவிரியில் நீராடிவிட்டு நதியின் மேலுள்ள பாலத்தின் வழியே வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். எதிரில் வந்த உரை கேட்கும் அன்பர், மீண்டும் ஒருமுறை நினைவூட்டி, திருவாசகத்திற்கு உரை எழுத வேண்டி வற்புறுத்தினார். செட்டியார், ’ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே? இந்த அனுபவ நூலுக்கு நானா உரை எழுதுவது? இன்னும் ஒருமுறை என்னை வற்புறுத்தினால் அப்படியே நதியில் குதித்து விடுவேன்.’ என்றார் தியாகராஜ செட்டியார்.” இந்தத் தகவல், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், ஒரு புத்தகத்திற்காக எழுதிய அணிந்துரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியாகும். அந்த நூலின் பெயர் “திருவாசகமும், சிவராஜயோகமும்”; நூலின் ஆசிரியர், நமது மன்றப் பொருளாளர் Dr.இர.பாஸ்கரன் அவர்களின் தந்தையார் சிவயோகி மா.இரத்தினசபாபதி அவர்களாவார்.
ஆயினும், மணிவாசகரோ “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவர் செல்வர் சிவனடிக்கீழ்....” என அறிவுறுத்துகிறார் அப்படியானால் பொருள் உணராதவர்கள் அவர் சொல்லிய பாட்டை சொல்லக்கூடாதா என்ற கேள்வி எழும். பொருளோ, அவரவர்களுடைய அறிவுக்கும், அனுபவத்திற்கும், குருவருள், திருவருள் உணர்த்தும் நிலைமைக்கும் ஏற்ற அளவினது என்று கொள்வோம்.
“அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்” மாணிக்கவாசகருக்குப்பின் 12 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பிய விஞ்ஞானி Nicolaus Copernicus கண்டது; “அளப்பருந்தன்மை வளப்பெருங் காட்சி”யாகிய அண்டவெளி தொலைநோக்கி வழியே கண்ட 16-ஆம் நூற்றாண்டின் Galileo Galilei-யின் பிரமிப்பு; “ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரும்” புவியீர்ப்பு சக்தி 17-ஆம் நூற்றாண்டில் Issac Newton, வியந்து போற்றியது; “துன்னணுப்புரையச் சிறியவாகப் பெரியோன் தெரிந்தது” 1930-ல் புரியாமல் புரிந்துகொண்ட Wolfgang Pauli; “முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து...முன்சுரக்கும் இன்னருளே என்னப்பொழியும் மழை” அடுக்கிக்கொண்டே போகலாம்:
சிந்தனைக்கரிய சிவத்தை, ஒழிவற நிறைந்த ஒன்றை, உள்ளத்துணர்ச்சியில் கொள்ளவும் படாததை, நூலுணர்வுணரா நுண்ணியதை, சிறியதாகத் தோன்றும் பெரியதை, யாவையுமாய் அல்லையுமான சோதியை துன்னிருளை, வேறு வேறுருவும் வேறுவேறு இயற்கையும் நூறு நூறாயியிரம் இயல்புடையதை, ஒன்று-உண்டு-இல்லை என்று அறிவொளித்ததை, ஆணெனத் தோன்றி, அலினெப் பெயர்ந்து, வாள் நுதற் பெண்ணென ஒளித்ததை, (மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்ததை), இத்தந்திரத்தில் காணலாமென்றிருந்தோர்க்கு அத்தந்திரத்தின் அவ்வயின் ஒளித்ததை, நமக்கெல்லாம் உணர்த்தும் முயற்சி, அவரின் ஆழங்கால்பட்ட அறிவு, ஆன்மிக அனுபவம், திருவருள் நிறைவு ஆகியவற்றிற்குச் சான்றாகும். கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட பண்பிற்கு, அன்பிற்கு, நேயத்திற்கு சிந்தனைச் செல்வர் சிவச்சந்திரன் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து, திருஅண்டப்பகுதியில் சஞ்சரிக்க வகை செய்த பாங்கிற்கு நன்றி சொல்வோம்
Wednesday, July 21, 2010
திருஞானசம்பந்தரின் இசைஞானத் தமிழ்
உயரிய கருத்துக்களை, உலகியலாயினும், ஆன்மிகமாயினும், இசை வழியே செவிக்குணவாக்குவதே மக்களின் சிந்தை நலம் சிறக்க, செழிக்க, தகுந்த வழி, சரியான வழி என்று அருளாளர்களாகிய நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும் தெரிவுசெய்தனர். சுருங்கச் சொல்லுதலும், பாடல்களால் மட்டுமே முடியும். உரைநடையில் பல பக்கங்களில் எழுதக்கூடிய செய்தியை இரண்டு வரிகளில், ஏழு சீர்களில் சொல்லி முடித்தார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர். படனம் செய்வதற்கும், மனனம் செய்வதற்கும் உகந்தது இசைப் பனுவல்களே என்பது யாவரும் அறிந்த உண்மை.
இந்தப் பின்னணியில், பன்னிரு திருமுறைகளில், முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தரால் அருளிச்செய்யப்பட்டவை. வகுக்கப்பட்ட வகைகள் இரண்டு-ஒன்று பதிகங்களின் பண்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கும் முறை “பண் முறை” .மற்றொன்று அந்தப் பதிகங்கள் எந்தத் தலங்களில் பாடப்பட்டன என்பதைத் தெரிந்து அமைக்கப்பட்ட “தலமுறை”. நம்பியாண்டார் நம்பி பண்முறையை அடிப்படையாகக் கொண்டு திருமுறைகளைத் தொகுத்துள்ளார். முதல் திருமுறையில் ஏழு பண்கள். இரண்டாம் திருமுறையில் 6 பண்கள், மூன்றாம் திருமுறையில் 9 பண்கள் என்ற வகையில் 22 பண்களைக் கொண்டது இசை ஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைகள்.
திரு.வீரபத்திர முதலியார் என்னும் ஆராய்ச்சியாளர் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் சித்தாந்த தீபிகை என்ற ஆய்விதழில் தி.ஞா.சம்பந்தர் தமிழ் பக்தி, இசை இலக்கியத்திற்கு ஆற்றியுள்ள அரும்பெருந் தொண்டையும், அவரின் சாதனைகளையும் பற்றி “Lord Sambanda and an unknown Tamilian Prosody” என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கத்தின் ஒரு பகுதி::
“யாண்டும் திகழும் இறையருளைப் போற்றிப் புகழ்ந்து அடங்காத தாகத்துடன், மடை திறந்தாற் போல் பற்பல யாப்பு முறைகளில் ஏறத்தாழ நூறு வகையான புதுப்புது யாப்பு வகைகளை இவ்வளவு நேர்த்தியாக பாடிச் சென்றுள்ள புலவர்கள், வடமொழி உட்பட வேறு எங்கேயும் இருந்திருக்கிறார்களா? தெரியவில்லை. இவற்றில் காலவெள்ளத்தில் மூழ்கிப் போனவைகளைச் சேர்த்துக்கொள்ளவில்லை. இன்று கிடைக்கப்பெற்றவை அந்தப் பெருவெள்ளம் விட்டுச் சென்ற குளங்களின் தேக்கங்களாகவே தோன்றுகின்றன.”
நம்பியாண்டாரரும், சேக்கிழாரும் சம்பந்தர் படைத்த புதிய யாப்புகளை-திருவிருக்குக்குறள், பல்பத்து, பாசுரம், யாழ்முரி, சக்கரமாற்று, மொழிமாற்று, மாலைமாற்று, வழிமொழி, மடக்கு, இயமகம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, ஈரடி, ஈரடிமேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு, அராகம், சக்கரம் ஆகிவற்றை மூல இலக்கியம் என்று முறைப் படுத்தினார்கள்.
பண்மதியால் சொன்ன பாடல்(3.360.11); கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கலால், ஓதி வந்த வாய்மையால் உணர்த்துரைக்கலாகுமே(3.310.7); கானத்தின் எழு பிறப்பு என்று சேக்கிழார் சம்பந்தரை மெய் சிலிர்த்து அழைக்கிறார்; நம்பி ஆரூரர் அவரை நல்லிசை ஞான சம்பந்தன்(7.67.5) என்று போற்றுவார். “சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன்”(2.170.11); “தமிழ்க் கிளவி இன்னிசை செய் ஞானசம்பந்தன்” என்பவை சம்பந்தரே கூறிக்கொள்பவை.
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து பண்ணொடு ஆநந்தமாய் இசையுடன், பாட முடியவில்லையே என்று யாரும் அயர்ச்சியுற வேண்டாம்.
இசைப்பயிற்சி இல்லாதவர்கள், பண்ணிசை அறியாதவர்கள் மனம் தளரவேண்டாம். மறைஞான சம்பந்தர் மாற்றுக்கூறித் தேற்றுவிக்கின்றார்:
தாழிளங் காவிரி வடகரையடைகுரங்காடுதுறைப்
போழிளமதி பொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்
காழியான் அருமறை ஞானசம்பந்தன் கருது பாடல்
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடுவானுலகின் ஊடே(3/6/739-திருவைகாவூர்/987)
(..கோழை பொருந்திய கண்டத்தை உடையவராகி, இசைத்துப்பாடும் பான்மை இலராயினும் உரிய பண்ணிசையின்றி ஓதி உரைத்தாலும் அவர்கள் வானுலகில் உயர்வாக வைக்கப்படுவார்கள். தமக்குக் கூடுகின்ற இசையால், அன்பின் மிகுந்த அடியவர் எவ்வகையில் சொன்னாலும், அவற்றை ஏற்றுமகிழ்பவர் சிவபெருமான். திருப்பதிகங்களைப் பண் இசையுடன் ஓதுதல் முறையாதலாயினும் அத்தகைய மரபினை விடுத்து இப்பதிகத்தை ஓதினாலும் நன்மை பயக்கும்)
226 திருத்தலங்கள் மேவி, 22 பண்கள் 4168 பாடல்களை உள்ளடக்கிய 384 பதிகங்கள் தோறும் மனிதரை ஆற்றுவித்து, தேற்றுவித்து, ஊக்குவித்து, ஓங்குவிக்கும் திருஞானசம்பந்தரின் ஆற்றல் வாய்ந்த திருக்கடைக்காப்பு வரிகள் “எனது உரை தனது உரையாக” ஆணையிட்டுச் சாற்றுவிக்கப்பட்டவையாகும். “நான் உரைக்கும் வார்த்தையெலாம் நாயகன் சொல் வார்த்தையன்றி நான் உரைக்கும் வார்த்தை அன்று”, என இராமலிங்க சுவாமிகளும் பின்னர் இக்கருத்தை எதிரொலித்தார். மெய்ஞ்ஞானத்தை எண்ணியவர் எண்ணியாங்கு எய்திட ஞானசம்பந்தரின் பொய்யிலி மாலைகள் போன்ற இரட்சை வேறில்லை என்பதைக் கருத்தில் கொள்வோம்.
அங்கண்மதி கங்கைநதி வெங்கண் அரவங்கள் எழில் தங்கும் இதழித் துங்க மலர் தங்கு சடையர்(3.723) சூடிக்கொண்ட ஞானசம்பந்தராகிய பட்டை தீட்டப்பட்ட ஒப்பிலாமணியின் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டுவித்து அவரை என்றென்றும் நம் நினைவில் நிறுத்தி, சிந்தனைசெய்து உய்வோம்.
இந்தப் பின்னணியில், பன்னிரு திருமுறைகளில், முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தரால் அருளிச்செய்யப்பட்டவை. வகுக்கப்பட்ட வகைகள் இரண்டு-ஒன்று பதிகங்களின் பண்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கும் முறை “பண் முறை” .மற்றொன்று அந்தப் பதிகங்கள் எந்தத் தலங்களில் பாடப்பட்டன என்பதைத் தெரிந்து அமைக்கப்பட்ட “தலமுறை”. நம்பியாண்டார் நம்பி பண்முறையை அடிப்படையாகக் கொண்டு திருமுறைகளைத் தொகுத்துள்ளார். முதல் திருமுறையில் ஏழு பண்கள். இரண்டாம் திருமுறையில் 6 பண்கள், மூன்றாம் திருமுறையில் 9 பண்கள் என்ற வகையில் 22 பண்களைக் கொண்டது இசை ஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைகள்.
திரு.வீரபத்திர முதலியார் என்னும் ஆராய்ச்சியாளர் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் சித்தாந்த தீபிகை என்ற ஆய்விதழில் தி.ஞா.சம்பந்தர் தமிழ் பக்தி, இசை இலக்கியத்திற்கு ஆற்றியுள்ள அரும்பெருந் தொண்டையும், அவரின் சாதனைகளையும் பற்றி “Lord Sambanda and an unknown Tamilian Prosody” என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கத்தின் ஒரு பகுதி::
“யாண்டும் திகழும் இறையருளைப் போற்றிப் புகழ்ந்து அடங்காத தாகத்துடன், மடை திறந்தாற் போல் பற்பல யாப்பு முறைகளில் ஏறத்தாழ நூறு வகையான புதுப்புது யாப்பு வகைகளை இவ்வளவு நேர்த்தியாக பாடிச் சென்றுள்ள புலவர்கள், வடமொழி உட்பட வேறு எங்கேயும் இருந்திருக்கிறார்களா? தெரியவில்லை. இவற்றில் காலவெள்ளத்தில் மூழ்கிப் போனவைகளைச் சேர்த்துக்கொள்ளவில்லை. இன்று கிடைக்கப்பெற்றவை அந்தப் பெருவெள்ளம் விட்டுச் சென்ற குளங்களின் தேக்கங்களாகவே தோன்றுகின்றன.”
நம்பியாண்டாரரும், சேக்கிழாரும் சம்பந்தர் படைத்த புதிய யாப்புகளை-திருவிருக்குக்குறள், பல்பத்து, பாசுரம், யாழ்முரி, சக்கரமாற்று, மொழிமாற்று, மாலைமாற்று, வழிமொழி, மடக்கு, இயமகம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, ஈரடி, ஈரடிமேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு, அராகம், சக்கரம் ஆகிவற்றை மூல இலக்கியம் என்று முறைப் படுத்தினார்கள்.
பண்மதியால் சொன்ன பாடல்(3.360.11); கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கலால், ஓதி வந்த வாய்மையால் உணர்த்துரைக்கலாகுமே(3.310.7); கானத்தின் எழு பிறப்பு என்று சேக்கிழார் சம்பந்தரை மெய் சிலிர்த்து அழைக்கிறார்; நம்பி ஆரூரர் அவரை நல்லிசை ஞான சம்பந்தன்(7.67.5) என்று போற்றுவார். “சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன்”(2.170.11); “தமிழ்க் கிளவி இன்னிசை செய் ஞானசம்பந்தன்” என்பவை சம்பந்தரே கூறிக்கொள்பவை.
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து பண்ணொடு ஆநந்தமாய் இசையுடன், பாட முடியவில்லையே என்று யாரும் அயர்ச்சியுற வேண்டாம்.
இசைப்பயிற்சி இல்லாதவர்கள், பண்ணிசை அறியாதவர்கள் மனம் தளரவேண்டாம். மறைஞான சம்பந்தர் மாற்றுக்கூறித் தேற்றுவிக்கின்றார்:
தாழிளங் காவிரி வடகரையடைகுரங்காடுதுறைப்
போழிளமதி பொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்
காழியான் அருமறை ஞானசம்பந்தன் கருது பாடல்
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடுவானுலகின் ஊடே(3/6/739-திருவைகாவூர்/987)
(..கோழை பொருந்திய கண்டத்தை உடையவராகி, இசைத்துப்பாடும் பான்மை இலராயினும் உரிய பண்ணிசையின்றி ஓதி உரைத்தாலும் அவர்கள் வானுலகில் உயர்வாக வைக்கப்படுவார்கள். தமக்குக் கூடுகின்ற இசையால், அன்பின் மிகுந்த அடியவர் எவ்வகையில் சொன்னாலும், அவற்றை ஏற்றுமகிழ்பவர் சிவபெருமான். திருப்பதிகங்களைப் பண் இசையுடன் ஓதுதல் முறையாதலாயினும் அத்தகைய மரபினை விடுத்து இப்பதிகத்தை ஓதினாலும் நன்மை பயக்கும்)
226 திருத்தலங்கள் மேவி, 22 பண்கள் 4168 பாடல்களை உள்ளடக்கிய 384 பதிகங்கள் தோறும் மனிதரை ஆற்றுவித்து, தேற்றுவித்து, ஊக்குவித்து, ஓங்குவிக்கும் திருஞானசம்பந்தரின் ஆற்றல் வாய்ந்த திருக்கடைக்காப்பு வரிகள் “எனது உரை தனது உரையாக” ஆணையிட்டுச் சாற்றுவிக்கப்பட்டவையாகும். “நான் உரைக்கும் வார்த்தையெலாம் நாயகன் சொல் வார்த்தையன்றி நான் உரைக்கும் வார்த்தை அன்று”, என இராமலிங்க சுவாமிகளும் பின்னர் இக்கருத்தை எதிரொலித்தார். மெய்ஞ்ஞானத்தை எண்ணியவர் எண்ணியாங்கு எய்திட ஞானசம்பந்தரின் பொய்யிலி மாலைகள் போன்ற இரட்சை வேறில்லை என்பதைக் கருத்தில் கொள்வோம்.
அங்கண்மதி கங்கைநதி வெங்கண் அரவங்கள் எழில் தங்கும் இதழித் துங்க மலர் தங்கு சடையர்(3.723) சூடிக்கொண்ட ஞானசம்பந்தராகிய பட்டை தீட்டப்பட்ட ஒப்பிலாமணியின் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டுவித்து அவரை என்றென்றும் நம் நினைவில் நிறுத்தி, சிந்தனைசெய்து உய்வோம்.
Friday, July 16, 2010
அழகிய சிக்கல் சிங்கார வேலவனும், அயில் வேலும்

அறங்கொள் உமையோடு அயில் ஏந்திய எம் ஐயனொடுந்தான் அமர்கின்ற திறங்கொள் கோலம் கண்டு களிக்கும் மறங்கொள் எயில் மூன்றெறித்தான் கனகமலையான் அடியார் மயல் தீர்ப்பான் பிறங்கும் சடைப் பிரானை முதற்கண் போற்றி, “அழகிய சிக்கல் சிங்கார வேலனும், அயில் வேலும்” என்ற தலைப்பை மேற்கொண்டு தமிழகத்தின் தெய்வத்திருத்தலங்களில் ஒன்றான சிக்கலைப் பற்றிச் சிந்திப்போம்...
1. சிக்கலுக்கும், வெண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்? வெண்ணெய் எந்த சிக்கலில் சிக்கியது? இந்த சிக்கலை அவிழ்க்க வாருங்கள் போவோம் சிக்கலுக்கு. சிக்கல் திருவாரூர் - நாகப்பட்டினம் வழித்தடத்தில் அமைந்துள்ள திருத்தலமாகும்.
2. சிக்கலென்றவுடன் சிங்காரவேலவர் நினைவுக்கு வந்தபோதிலும் , மூலவர் முருகர் அன்று! அரி விரிஞ்சர் தேட அரிய தம்பிரானாம் எம்பிரான் சிவ பெருமான் தான் ‘திருவெண்ணெய்நாதர்’(வட மொழியில் நவநீதேஸ்வரர்) என்ற பெரில் இருந்து அருள் பாலிக்கிறார். அம்பிகையின் பெயர் ‘வேலொண்கண்ணி’(வேல்+ஒண்+கண்ணி). கற்றைச் சடையான் கண்மூன்றுடையானுக்கும், அவர் தம் பாகத்திருக்கும் உடையாளுக்கும், மேற்கூறிய தலப்பெயர்கள் வர சுவையான காரணங்கள் உண்டு.
3. இப்பொழுது, வெண்ணெய் சிக்கலில் மாட்டிக்கொண்ட வரலாற்றைக் கேட்போம். வசிட்ட முனிவர் இத்தலத்தில் சிவ பெருமானை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வந்தார். பராபரன் அவரது கசிந்துருகும் பக்தியை மெச்சி, காமதேனுவை முனிவருக்கு வழங்கி மகிழ்ந்தார். காமதேனுவின் பாலிலிருந்து கடையப்பட்ட வெண்ணெயைக் கொண்டு இலிங்கம் பிடித்து பூசனை செய்தார் வசிட்ட மாமுனி. அவருடய யோக வலிமையினால் வெண்ணெயிலிங்கம் உருகாமல் உறுதியாய் நின்றது. பூசை முடிந்து வெண்ணெயை அள்ள முயன்றபோது, அகற்ற முடியாமல் வெண்ணெய் பீடத்துடன் “சிக்கி” நிலைத்து நின்றது. அதனால் தான் இத்தலத்திற்கு “சிக்கல்” என்றும், மூலவருக்கு “திருவெண்ணெய்நாதர்” என்ற பெயர்கள் வழங்கியதாக வரலாறு சாற்றுகின்றது. கோச்செங்கணான் என்ற சோழ மன்னன் எழுப்பிய எழுபது கோயில்களுள் இதுவும் ஒன்று.
4. அம்பிகைக்குத் தேன் தமிழில் “வேலொண்கண்ணி” என்று பெயர் வரத் தனிக்காரணம் ஏதும் தேவையில்லைதான், புவனம் முழுமையும் இலக்காக்கி நோக்கும் அகிலாண்ட நாயகியின் விழிக் கூர்மையும், சக்தி வாய்ந்த பேரொளியும், பெயரை நியாயப்படுத்தப் போதுமானதேயாகும். மேலும் “திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர் செருவடங்க” சக்திவேலை அன்னை அபிராமி அழகு தமிழ் அறுமுகனுக்கு வழங்கிய பெருநிகழ்வு இங்குற்றது.
5. அருணகிரியார் திருப்புகழிலும், வேல்விருத்தத்திலும் போற்றித் துதிக்கும் நிகழ்வாகும்.
“பம்பரமே போலாடிய
சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி கரசூலி
பங்கமிலா நீலி மோடி
பயங்கரி மாகாளி யோகினி
பண்டு சுராபான சூரனொடு எதிர் போர் கண்டு
எம்புதல்வா வாழி வாழி
எனும்படி வீறான வேல் தர
என்றும் உளானே மநோகர வயலூரா” - திருப்புகழ்.
“சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
திரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொன் திருக்கை வேலே” - வேல் விருத்தம்.
6. வேலின் பெருமையையும், மகிமையையும் பற்றி சற்று சிந்திப்போம். எல்லாம் வல்ல இறைவனுக்கு ஆயுதம் எதற்கு? - பகுத்தறிவுவாதிகளின் நியாயமான கேள்வி. வேல், சூலம், சக்கரம் முதலியவை சூட்சுமங்களை, நுண்பொருள்களை உருவகப்படுத்தும் அடையாளச் சின்னங்களாம். கணிதத்திலும், அறிவியலிலும், பொறியியலிலும் ‘Symbols’ - அடையாளக் குறியீடுகள் இல்லாமல் விளக்கமுடியாது; தேர்வில் வினாக்களுக்கு விடை காணும் முயற்சி கிடைத்த நேரத்தை வீணாக்குவதில் முடியும். கந்தனின் வேல் ஞானத்தையும். சிவனின் சூலம் முக்காலத்தையும், மாலின் சக்கரம் காலச்சுழற்சியையும் குறிக்கும் குறியீடுகளாம். சிங்கார வேலனை அலங்கரிக்கும் நோக்குடன் அருணகிரியார் பாடிப்பரவிய வேலொடு கூடிய அடைமொழிகள் பலவாகும். கந்தர் அனுபூதியிலும், கந்தர் அலங்காரத்திலும் கையாளப்பட்ட சில சொற்றொடர்களைக் காண்போம் :
• கைவாய் கதிர்வேல்
• முதுசூர்பட வேல்
• அடி அந்தமிலா அயில்வேல்
• கிரிவாய் விடு விக்ரமவேல்
• வினை ஓடவிடும் கதிர்வேல்
• குன்றம் திறக்கத் துளைக்கும் வைவேல்
• வையிற் கதிர்வடிவேல்
• குன்றம் எட்டும் கிழித்தோடும் வேல்
• பொங்கார வேலையில் வேல்
• வேலுக்கு அணிகலம் வேலையும், சூரனும், வெற்பும்
• சாடும் சமரத் தனிவேல்
• பயந்த தனிவழிக்குத் துணை வடிவேல்
• வாரிதி வற்றச் செற்ற நெடுவேல்.
7. வேல் ஞானத்தின் குறியீடென்றால், சூரன், கிரௌஞ்சம், கிரி, குன்றம், வெற்பு, வேலை, வாரிதி முதலியவை எவற்றைக் குறிக்கின்றன?
• சூரபன்மன். . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .ஆணவமலம்
• தாரகாசூரன். . . . . . . . . . .. . . . . . . . . . . . . . மாயாமலம்
• சிங்கமுகசூரன். . . . . . . . . . . . . . . . . . . . . . .கன்மமலம்
• கிரௌஞ்ச மலை, கிரி, குன்றம், வெற்பு. . . . . .வினைத் தொகுதி.
• வாரிதி, வேலை, கடல் . . . . . . . . . . . . . . . . .பிறவித்துயர்
ஆணவம் எனப்படும் சூரன் நம்முள்ளிருந்து, மாயாமலம், கன்மமலமாகிய இரு இளவல்களின் துணையொடு நம்மை ஆட்டிப்படைத்து பன்னெடுங்காலமாகக் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வருகிறான். வினைத்தொகுதிகளால் பீடிக்கப்பட்டு, பிறவி என்ற வாழ்க்கைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். பேராசை எனும் பிணியில் பிணிபட்டு, மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து, இல்லே எனும் மாயையில் உழன்று கொண்டிருக்கின்றோம்.. இந்த சுழற்சியிலிருந்து விடுபட வழியுண்டா என்று ஏங்குபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் அருணகிரியார். அவர் பாழ்வாழ்வு எனும் இப்படு மாயையில் சிக்கித்தவித்து உயிர்த்தியாகம் செய்யும் தருணத்தில் குருமலையின் மருவு குருநாதன், உம்பர்தம் பெருமாள் தடுத்தாட்கொண்டார். அனுபவப்பட்டவர்; நம்மை மீட்கும் உபாயமும், வழியும் அவருக்குத் தெரியும். கந்தர் அனுபூதியும், கந்தர் அலங்காரமும் நம்மை உய்வித்து நற்கதிக்கு இட்டுச்செல்லும் நெறி முறைகளாகும்.
வெல்வது வேல், ஆதலால் வெற்றிவேல்; அஞ்ஞான இருளைப் போக்குவதால் சுடர்விடும் கதிர்வேல்; மாயையை ஒழிப்பதால் வைவேல்; வினைகளை ஓடவிடுவதால் தனிவேல். மேலும், திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன், நமதுளத்தில் உறை குகனுடைய வேல் :
• இந்திரன் கால்களிலிட்ட தளைகள் தெறிக்க வரமாகும்..
• நக்கீரப் பெருமான் அடைபட்டிருந்த மலைக்குகையை இடித்து வழிகாட்டும்.
• தேவர், முனிவர், இந்திரன், பிரமன், நரர் தமக்குமுறும் இடுக்கண் வினை சாடும்.
• முருகனைத் துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர் நினைத்தால் அவர் குலத்தை முதலறக் களையும்.
• தனித்து வழி நடக்கும் அடியவர், இடத்தும், வலத்தும், இருபுறத்தும், அருகடுத்தும், இரவு பகல் துணையதாகும்.
திருமுருகாற்றுப்படை அருளிய நக்கீரதேவநாயனார் சாற்றுவது : “சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல்”, “இருகை ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப”,
“வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றுந்
தொளைத்த வேல்உண்டே துணை”.
8. இவ்வளவு பெருமையும், மகிமையும் வாய்ந்த சக்திவேலை சொக்கேசர் பிள்ளைக்கு சொக்கும் வடிவுடைநாயகி ஆண்டுதோறும் வழங்கும் காட்சியை சிக்கலில் பார்ப்பதுதான் சிறப்பு. பன்னிரண்டு படிகள் ஏறி கோயிலுக்குள் நுழைகின்றோம். எந்தை வெண்ணெய்ப்பிரானின் கோயில்தானென்றாலும், “இங்கே எனக்குத் தனி முக்கியத்துவம்” என்று பறை சாற்றுவது போல், அறுமுகவனின் பன்னிரு திருக்கரங்களை அடையாளப்படுத்தும் வகையில் பன்னிருபடிகள் போலும்.
“வாங்கும் எனக்கு இருகை; ஆனால் அருளை
வழங்கும் உனக்குப் பன்னிருகை. . . . . . .. . . .”
என்று பாடுவார் அன்பர் ஊத்துக்காடு வேங்கடசுப்பைய்யர்.
படிகள் ஏறும்பொழுது, அத்தனை கரங்களும் நம்மைத் தாங்கி, அணைத்து, அழைத்து வரவேற்பதைப்போல் தோன்றுவது பிரமை அல்ல, உண்மை. முதல் படிக்கருகே சுந்தர விநாயகர். தம்பிக்குச் சளைத்தவன் நானல்ல என்ற மிடுக்கோடும் கம்பீரத்தோடும் நம்மைக் கவர்ந்திழுக்கிறார். கருவறையில் வெண்ணெய்நாதரை தரிசிக்கிறோம். உத்சவமூர்த்தமாக - ஆறுமுகங்களும், ஈறாறு கரங்களும், வள்ளி தேவானை இருபுறத்தும், மயில்மேலுறை கோலம் கண்கொள்ளாகாட்சி.
9. கந்தர் சஷ்டிக்கு முன்தினம், முருகவேள் அன்னை வேலொண்கண்ணியிடம் ஓடோடிச்சென்று வேல் பெற்றுத் திரும்புவார்.. ஓடிய ‘இளைப்பில்’ வியர்வைத்துளிகள் முத்து முத்தாய் முத்துக்குமரனின் திருமுகத்தில் அரும்பித் துளிர்க்கும் அற்புதக் காட்சியைக் காணத் திரளும் பக்தர்கள் எண்ணிலடங்கார். ஆடிக்கிருத்திகை, கந்தர் சஷ்டி, தைப்பூசம் போன்ற சிறப்பு விழாநாட்களில் தங்கவாகனங்களில் வீதிஉலா வருவார்.
சிங்கார ரூபமயில் வாகன நமோநம
கந்தா குமார சிவதேசிக நமோநம
சிந்தூர பார்வதி சுதாகர நமோநம
சோதி கதிர் வேலவ நமோநம
கங்காள வேணி குருவானவ நமோநம
என்றோதி வேலே விளங்கு கையான் செய்ய தாளினில் வீழ்ந்து இறைஞ்சி, விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வை அருள வேண்டி , சமரிடை மெத்தப் பொங்காரமாய் வரும் அசுரரை வெட்டிச் சங்காரமாடிய, அழகிய சிக்கற் சிங்கார வேலவரை எப்போதும் சிந்தித்திருப்போம்.
Thursday, July 15, 2010
இறை பணியே, திருநெறி; திருநெறியே, இறைபணி

உ
உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒரு தொழிலைப்
பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும் நின் பாதத்திலே
கண்ணும் கருத்தும் தமியேனுக்கு இன்றைக்கும் என்றைக்கும் நல்கு
விண்ணும் புகழ் கடவூர் வாழும் கள்ள வினாயகனே!
இறை பணியே, திருநெறி; திருநெறியே, இறைபணி. ஏகனுமாகி அநேகனுமாகிய ஏகாம்பரத்தை, தென்னாடுடைய சிவனை, எந்நாட்டவர்க்கும் இறைவனைப் போற்றி வணங்கி இடுகையைத் தொடர்வோம்.
அருணகிரிநாத சுவாமிகள், மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் மரகத மயூரப் பெருமாளை, சுடர் வேலவனைப் போற்றி அருளிய திருப்புகழ் மாலையில் தொடுக்கப்பட்ட ஒரு சில மலர்களின் நறுமணத்தை சிறியேன் நுகர்ந்தவன் என்ற முறையில், அவர் “தீர்த்த மலை” மூர்த்தியைத் துதித்து பாடிய பாடலை சிந்திக்க முற்படுகின்றேன்.
பாடலுக்கு முன் ஒரு செய்தி : மூவர் முதலிகளான அப்பர், சம்பந்தர், சுந்தரரைப் போல், அருணகிரியாரும் தலயாத்திரை மேற்கொண்டு - வடக்கே இமயமுதல் (பா.எ.141, 142), தெற்கே இலங்கை (131 - 139) வரை, சந்தம் நிறைந்த பாடல்களால் கந்தப் பரம்பொருளை சிந்தித்து மகிழ்ந்திருக்கிறார். அருணகிரியாரைப் பொருத்தவரை, ஒரு தலத்தில் முருகப்பெருமானின் மூர்த்தம் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கின்றதா, இல்லையா என்பதைப்பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை. அவர், எங்கும், எதிலும் குமரகுருபரனையே காண்பவராதலால், பாடல் பார்வதி மைந்தனான கார்த்திகேயனைப் பற்றியே புனையப்பட்டிருக்கும். எடுத்துகாட்டாக பா.எ.144 - தலம் ஏழுமலையான் உறை திருப்பதி - “வேந்த குமார குகசேந்த மயூர வட வேங்கட மாமலையிலுறைவோனே / வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்ட வெறாதுதவு பெருமாளே.” வைணவ பக்தர்களுக்கு மாமாயன் வைகுந்தன் நாராயணன் “பெரும் ஆள்”- பெருமாள். தீயாடும் கூத்தனின் தில்லையம்பதி, சிதம்பரம் (பா.எ.189 - 200), “கயிலை மலைதனிலாடிய தந்தைக்குருக, மனமுனை நாடியெ கொஞ்சிக் கனகசபைதனில் மேவிய கந்தப்பெருமாளே.” அருணகிரியாரின் பெரும்பான்மையான திருப்புகழ் பாடல்களின் கடைசி வார்த்தை “பெருமாளே”. சிவஞான உபதேசிகன் சுப்ரமணியன் அவருக்குப் “பெருமாள்”.
தீர்த்தமலை மொரப்பூர் புகை வண்டி நிலையத்துக்கு 8 மைல் தொலைவில் உள்ள ஹரூருக்கு வடகிழக்கே 9 1/2 மைலில் உள்ள தலம். மலை அடிவாரத்திலும், மலையின் மேலும் ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இப்பொழுது பாடலுக்குள் நுழைவோம்:
“பாட்டிலுருகிலை கேட்டுமுருகிலை
கூற்று வருவழி பார்த்துமுருகிலை
பாட்டை அனுதினம் ஏற்றுமறிகிலை தினமானம்
பாப்பணியனருள் வீட்டை விழைகிலை
நாக்கின் நுனிகொடு ஏத்த அறிகிலை
பாழ்த்த பிறவியிலேற்ற மனது நல்வழிபோக
மாட்டமெனுகிறை கூட்டை விடுகிலை
ஏட்டின் விதிவழி ஓட்டமறிகிலை
பார்த்துமினியொரு வார்த்தை அறைகுவன் இது கேளாய்
வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன்
ஏத்த புகழடியார்க்கும் எளியனை
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை மருவாயோ
ஆட்டி (1) வடவரை வாட்டி அரவொடு
பூட்டி திரிபுரம் மூட்டி (2)மறலியின்
நாட்டம் அற சரண் நீட்டி (3)மதனுடல் திருநீறாய்
ஆக்கி (4)மகம் அதை வீட்டி ஒருவனை
ஆட்டின் முகம் அதை நாட்டி (5)மறைமகளார்க்கும்
வடுவுற வாட்டும் உமை அவன் அருள் பாலா
சீட்டை எழுதி வையாற்றில் எதிர் உற
ஓட்டி அழற் பசை காட்டி சமணரை
சீற்றமொடு கழுவேற்ற அருளிய குருநாதா
தீர்த்த எனதகம் ஏட்டை உடன் நினை
ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி
தீர்த்தமலை நகர் காத்த சசிமகள் பெருமாளே.”
அருணகிரியார் தனது மனதை முன்னிலைப் படுத்தி, இந்தப் பாடலைத் தனக்காகவே பாடிக்கொண்டது போல் தோன்றினாலும், மற்றவர்களுக்காகப் பாடப்பட்டது என்பதே உண்மை.
பாட்டிலுருகிலை, கேட்டுமுருகிலை, பார்த்துமுருகிலை :- நாம் உருகவில்லையே என்று வருந்துகிறார். உருக முடியாமைக்குக் காரணம் என்ன? குழந்தையாயிருந்த போழ்து மனித மனம் இளகி நீரோட்டமாயிருந்தது. குழந்தை innocense – என்று உருவகப்படுத்துவது; களங்கமற்றது, குற்றமேதுமில்லாதது. கள்ளம், கபடம், சூது, வாது அறியாதது. உருகி அழுவது அதன் இயல்பு. அதே மனித மனம் காலப் போக்கில் இறுகிப் பனிப்பாறையாய் ஆகின்றது. நான், எனது எனும் தட்பம் மிகுந்ததால் நீர் குளிர்ந்து பாறையாகின்றது. பாறையாயிருந்தாலும் ஆசைக் கடலில் மிதக்கும். மிதக்கின்ற இந்த பாறையும் உருகும். எப்பொழுது?
• துன்பமாகிய வெப்பம் தகிக்கும் போது, இழப்பு ஏற்படும் போது - இழப்பு நெருங்கிய உறவாயிருக்கலாம், உயிராயிருக்கலாம், உடல் உபாதையாயிருக்கலாம், விலை மதிப்புள்ள பொருளாயிருக்கலாம், செல்வமாயிருக்கலாம். இறுகிய பாறைக் கண்ணீராய்க் கசியும்.
• மிகுதியான மகிழ்ச்சியிலும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கப்படும். ஆனந்தமும் ஒருவகை வெப்பம்தான்.
• “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர் / புன்கண் நீர் பூசல் தரும்” என்பார் வள்ளுவப் பெருந்தகை. அன்பு கண்ணீராய் பெருக்கெடுக்கும்.
• காலத்தினால் செய்த இடர் களைந்து துயர் துடைத்த உதவி, நன்றியறிதலாய் கண்ணீராய் வழிந்தோடும்.
மாணிக்கவாசகப் பெருமான் போற்றிய வண்ணம் “முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளை”, எல்லையற்ற பரங்கருணையை, இராமலிங்க சுவாமிகள் போல் நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து, நன்றி மறவாது ஊற்றெழுங் கண்ணீரதனால் உடல் நனைதலே உண்மையான உருகுதல். நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருகத் / தஞ்சத்தருள் சண்முகனுக்கியல் சேர் செஞ்சொற்புனை மாலை சிறந்திடவே என்கிறார் அருணகிரியார்.
• முருகப் பெருமானுடைய திரு அருள் புகழ் நிறைந்த பாடல்களைப் பாடி மனம் உருக வேண்டும்.
• பாடி நெகிழ இயலவில்லையாயினும், பிறர் பாடக்கேட்டாவது உள்ளம் உருக வேண்டும்.
• உடல் வேறு, உயிர் வேறாகக் கூறு படுத்துகின்றவன் கூற்றுவன். கூறு போடும் வேலை எப்போது வேண்டுமானாலும் நேரலாம். உயிர் உடலை இழக்கப் போகிறது; உடல் உயிரை இழக்கப் போகிறது. மனங்கரைந்து உருகலாம்.
“பத்தித் திருமுகம் ஆறுடன், பன்னிரு தோள்களுமாய்த் / தித்திருக்கும் அமுது கண்டேன், செயல் மாண்டு அடங்கப் புத்திகமலத்துருகிப் பெருகிப் புவனம் எற்றித் / தத்திக் கரை புரளும் பரம ஆனந்த சாகரத்தே.”
பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை :- பாம்பு என்ற சொல் பாப்பு என மருவிற்று. தாருக வனத்து இருடிகள், வேதமே முதலும், பொருளும் என செறுக்குற்று அபிசார வேள்வி செய்து சிவபெருமனைக் கொல்வதற்கு கொடிய நச்சுப் பாம்புகளை ஏவினார்கள். அவைகளை அரனார் ஆபரணமாக அணிந்து கொண்டருளினார். கொல்லவந்த பாம்புக்கும் அருள்புரிந்த எம்பிரான் தொழுது வழி பட்டவர்க்கு எத்துணை அருள் புரிவார். இத்தகு கருணைக்கடலாகிய சிவபெருமான் அருளும், முத்திப் பேற்றை, மனமே நீ விரும்பவில்லையே!
நாக்கின் நுனி கொடு ஏத்த அறிகிலை :- நாவின் பெருமை சொல்லவும் அரிதே. மெய், வாய், விழி, நாசி, செவி - இவை ஐந்தும் அறிகருவிகள், ஞானேந்திரியங்கள்; கருவாய், எருவாய், கைகள், கால்கள், வாய் இவை ஐந்தும் செயற்கருவிகள், கர்மேந்திரியங்கள். இந்த இரண்டு வகை இந்திரியங்களுக்கும் பொதுவாய் இருப்பது வாய். வாய்க்குள் நாக்கு, பற்கள், கன்னக் கதுப்புகள், உமிழ் நீர் ஆகியவை அடங்கும். வாய்க்கு உற்ற துணை நாக்கு. உடலுறுப்பிலுள்ள மற்றெல்லாத் தசைகளை விட, நாக்கின் தசைத் தொகுதியை மட்டுமே நமதிச்சைப்படி, அதிக உடல் முயற்சி இன்றி செயற்படுத்தவும், ஆட்டுவிக்கவும் முடியும். மருத்துவர்கள் நாவை Skeletal muscle என்பார்கள். இதற்கான விளக்கத்தை Dr.PKB அவர்களிடம் பின்னர் கேட்டுப் பெறலாம். நமதிச்சைப்படி செயல்படக்கூடிய நாவால் இறைவனின் கருணயை, மாட்சிமையை பாடிப் பரவ வேண்டாமா?
வேறொரு விளக்கமும் உண்டு : நாவை இழுத்து, மேலாக வளைத்து, அண்ணத்தைத் தடவி, உள்நாக்கோடு சேர்ப்பது ஒரு வகை யோக நெறி. பயிற்சி முதிர்ந்தால் அமிர்தம் பருகலாம்.
நல்வழி போகமாட்டமெனுகிறை :- நீர் பள்ளத்தை நாடிச் செல்வது போல் மனம் ஈனச்செயல்களையும் பாவச் செயல்களையும் நாடுகின்றது. நல்ல வழியிலே நடக்க நாட்டமில்லை.
கூட்டை விடுகிலை :- கூடு, இந்த உடம்புதான். “தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி, இரு / காலால் எழுப்பி, வளை முதுகோட்டிக் கைந்நாற்றி நரம் / பாலார்க்கையிட்டுத் தசை கொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால் / வேலால் கிரி தொளைத்தோன் இருதாளன்றி வேறில்லையே.” இந்த கூடாகிய உடம்பு ஒரு சிறைச்சாலை. சிறைக்கதவு தங்கமாயிருந்தாலும், வெள்ளியாயிருந்தாலும், இரும்பாயிருந்தாலும் சிறை, சிறை தான். சிறைக்குள் அடைக்கப்பட்டதோடு அல்லாமல் அறம், பாவம் என்னும் இரு தளைகள். ஆனால் விடுதலை பெறுவதற்கான மனமுமில்லை, செயலுமில்லை. உயிர் உள்ள பொழுது உடலை விடுவது எப்படி? அருணகிரியார் அதைச் சொல்ல வரவில்லை. “இந்த உடல்தான் நான்” என்ற தவறான உணர்வை, நம்பிக்கையை, அடையாளம் கண்டு கொள்வதை, அறியாமையை விடச்சொல்கிறார். “சிறைச் சாலையே நான்” என்ற மயக்கத்தை விடச்சொல்கிறார்.
ஏட்டின் விதிவழி ஓட்டமறிகிலை :- பிரம்மா மண்டை ஓடாகிய ஏட்டில் எழுதி வைத்த விதிப்படிதான் வாழ்க்கையின் ஓட்டம் நடைபெறும். அதை எண்ணியாயினும் பற்றறுத்தான் பற்றினைப் பற்றமாட்டேன் என்கிறோம்.
பார்த்துமினியொரு வார்த்தை அறைகுவன் இது கேளாய் :- மனமே! நீ படும் பாட்டை, இந்த அவலத்தைக் கண்டு சும்மா இருப்பது நன்றன்று என்பதால் இப்பொழுது நான் சொல்வதைக் கேட்பாயாக.
வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் :-‘புகழ் ஏத்த, வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன்’ என்று மாற்றிப் பொருள் கொள்வோம். எப்படி என்றால், கந்தவேளின் புகழை ஏற்றிப் போற்றும் இனிய நல்வாக்கு சித்தியை அருளுவான். உள்ளத்தை நோக்கும் சித்தி, அதாவது தியானமும், நிட்டையும் கைகூடும். அன்பில் தோய்ந்த பக்தி செய்யும் அடியார்களின் இருவினைத் தளைகளும் தகர்த்தெரியப்படும்.
இந்தத் திருப்புகழ் பாடலின் ஒரு சிறப்பு சிந்தித்து மகிழ்தற்குரியது. பாடலின் மூன்றாவது பத்தியில் பஞ்சாக்கர(திருவைந்தெழுத்து) மூர்த்தியின், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஐந்தை அருணகிரியார் குறிப்பிட்டிருக்கிறார். திருவிளையாடல் ஒவ்வொன்றும் ஒரு சில வார்த்தைகளால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆட்டி (1) வடவரை வாட்டி அரவொடு / பூட்டி திரிபுரம் மூட்டி (2)மறலியின் / நாட்ட அற சரண் நீட்டி (3)மதனுடல் திருநீறாய் / ஆக்கி (4)மகம் அதை வீட்டி ஒருவனை / ஆட்டின் முகம் அதை நாட்டி (5)மறைமகளார்க்கும் / வடுவுற வாட்டும் உமை அவன் அருள் பாலா - இமைய மலையை வாட்டி வில்லாக வளைத்து, வாசுகி என்ற நாகங்களுக்கு அரசனை நாணாகப் பூட்டி, நாமளித்த வில்லும், அம்பும், தேரும், குதிரைகளும் திரிபுர அரக்கர்களை வதம் செய்ய சிவனார்க்கு உதவப் போகின்றன என்று இறுமாந்த தேவர்களின் எண்ணத்தை உணர்ந்த அரனார் திருவுளம் பற்றிச் சிறு புன்முறுவல் பூத்தது. திரிபுராதிகள் பொசுங்கி மாய்ந்தது; மார்க்கண்டேயரின் வாழ்நாள் முடிவுற்றது. உயிரைப் பற்ற வந்த இயமனை இடப்பாத மலரால் உதைத்து அடியவரைக் காத்தது; மன்மதனைப் பார்த்து எரித்தது (திரிபுராதிகளை சிரித்து எரித்தார், மதனைப் பார்த்து எரித்தார்). சங்கரனாரை ஒதுக்கி “சிவனா, அவன் கடவுளா?” என அவமதித்துத் தலையாட்டிய தக்கனுக்கு, ஆட்டின் தலையை நாட்டி யாகத்தை அழித்தது; கதைகள் உங்களுக்குத் தெரிந்தவைதான். விளக்கம் தேவையில்லை.
சீட்டை எழுதி வையாற்றில் எதிர் உற ஒட்டி, அழல் பசை காட்டி :- ஆளுடையப்பிள்ளை சம்பந்தப் பெருமான் மதுரையில் சமணர்களுடன் புனல் வாதஞ் செய்தபோது, “வாழ்க அந்தணர்...” என்ற திருப்பாசுரம் எழுதிய ஏட்டை வையாற்றில் விட்டருளினார். அவர் விடுத்த ஏடு நீரில் எதிர் ஏறிச்சென்றது. சமணர்கள் ஏடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
அனல் வாதஞ் செய்த போது, “போகமார்த்த...” என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிக ஏட்டை நெருப்பில் இட்டபோது, அந்த ஏடு கருகாமல், பச்சென்று பசுமையாயிருந்தது.
குருநாதா :- சமணர்களோடு வாதிட வேண்டிய கட்டாயத்திற்கு சம்பந்தர் ஆளானார். வாதிடுவதற்காக அவர் மதுரை செல்லவில்லை. மங்கையற்கரசியின் அழைப்பை ஏற்று பாண்டிய மன்னனின் உடல் நோவை திருநீற்றுப் பதிகம் பாடி குணமாக்கினார். தடுத்தாட்கொண்டார். தடுத்தாட்கொள்வது இறைவனின் அருட்செயல். சம்பந்தரை சிவஞான உபதேசிகனான முருகனாகவே ஏற்று “குருநாதா” என்று அழைக்கிறார்
தீர்த்த :- பரிசுத்தமானவரே- “ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” என்பார் மணிவாசகர்.
எனதகம் ஏட்டை உடன் நினை ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி :- அகம்-உள்ளம், ஏட்டை- விருப்பம். உள்ளத்தில் விருப்பமுடன் இறைவனுடைய அரும்பெருஞ்சோதியை, தனிப் பெருங் கருணையை ஏத்த வேண்டும். சசி தேவியின் மகள் தேவசேனைக்கு உகந்த பெருமாளும் அருள் பாலிப்பார்.
அருணகிரியின் அறிவுறை: பாடி உருகுங்கள், கேட்டு உருகுங்கள், பார்த்து உருகுங்கள்.
உருகும் அன்பர்களுக்கிடையே உருகுவதைப் பற்றிப் பேச நான் யார்? என்னையே உருக்கிக் கொள்ளத்தான்.
இறையைப் பற்றி, ஆன்மிகத்தைப் பற்றி சொல்லவேண்டிய எல்லாவற்றையும் நமக்கு முன்னே புகழொடு தோன்றி வாழ்ந்து, இறையொடு ஒன்றிய நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும், ஏனைய அருளாளர்களும் உணர்ந்து, கசிந்து பாடிப் பரவிச் சென்று விட்டார்கள். இனிப் புதிதாகச் சாற்ற வேண்டியது ஏதேனும் உண்டோ?
தமிழரின் வாழ்வும் வாக்கும், பக்தியும் ஆன்மீகமுமாய் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்த பெருநெறியாய் விளங்கி வந்திருப்பது கண்கூடு. நாத்தீகம் பேசி நாத்தழும்பேறியவராலும் மறுக்க முடியாத உண்மை. இறையைப் பற்றிப் “பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்ற திருநாவுக்கரசரின் அறிவுரையை சிரமேற்கொண்டு நாமும் பேசுவோம்..... எதைப் பற்றி? நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும், அருணகிரியாரும், பட்டினத்துப் பிள்ளையும், தாயுமானவரும், இராமலிங்க வள்ளலாரும், ஏனைய மத அருளாளர்களும், மெய் நெறியாளர்களும் உணர்ந்து, துய்த்து, பாடிப் பரவிய பரம் பொருளை, இறையை, இறையருளை ஏத்திப் போற்றிப் பாடிய பாடல்களை செந்நெறியாளர்களின் வாயிலாகக் கேட்போம், தெரிந்து தெளிவோம், சிந்திப்போம், சிந்தித்துப் பேசுவோம்.
தமிழரின் வாழ்வும் வாக்கும், பக்தியும் ஆன்மீகமுமாய் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்த பெருநெறியாய் விளங்கி வந்திருப்பது கண்கூடு. நாத்தீகம் பேசி நாத்தழும்பேறியவராலும் மறுக்க முடியாத உண்மை. இறையைப் பற்றிப் “பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்ற திருநாவுக்கரசரின் அறிவுரையை சிரமேற்கொண்டு நாமும் பேசுவோம்..... எதைப் பற்றி? நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும், அருணகிரியாரும், பட்டினத்துப் பிள்ளையும், தாயுமானவரும், இராமலிங்க வள்ளலாரும், ஏனைய மத அருளாளர்களும், மெய் நெறியாளர்களும் உணர்ந்து, துய்த்து, பாடிப் பரவிய பரம் பொருளை, இறையை, இறையருளை ஏத்திப் போற்றிப் பாடிய பாடல்களை செந்நெறியாளர்களின் வாயிலாகக் கேட்போம், தெரிந்து தெளிவோம், சிந்திப்போம், சிந்தித்துப் பேசுவோம்.
Subscribe to:
Posts (Atom)