குறிக்கோள்

இறையைப் பற்றி, ஆன்மிகத்தைப் பற்றி சொல்லவேண்டிய எல்லாவற்றையும் நமக்கு முன்னே புகழொடு தோன்றி வாழ்ந்து, இறையொடு ஒன்றிய நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும், ஏனைய அருளாளர்களும் உணர்ந்து, கசிந்து பாடிப் பரவிச் சென்று விட்டார்கள். இனிப் புதிதாகச் சாற்ற வேண்டியது ஏதேனும் உண்டோ? தமிழரின் வாழ்வும் வாக்கும், பக்தியும் ஆன்மீகமுமாய் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்த பெருநெறியாய் விளங்கி வந்திருப்பது கண்கூடு. நாத்தீகம் பேசி நாத்தழும்பேறியவராலும் மறுக்க முடியாத உண்மை. இறையைப் பற்றிப் “பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்ற திருநாவுக்கரசரின் அறிவுரையை சிரமேற்கொண்டு நாமும் பேசுவோம்..... எதைப் பற்றி? நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும், அருணகிரியாரும், பட்டினத்துப் பிள்ளையும், தாயுமானவரும், இராமலிங்க வள்ளலாரும், ஏனைய மத அருளாளர்களும், மெய் நெறியாளர்களும் உணர்ந்து, துய்த்து, பாடிப் பரவிய பரம் பொருளை, இறையை, இறையருளை ஏத்திப் போற்றிப் பாடிய பாடல்களை செந்நெறியாளர்களின் வாயிலாகக் கேட்போம், தெரிந்து தெளிவோம், சிந்திப்போம், சிந்தித்துப் பேசுவோம்.

Friday, July 16, 2010

அழகிய சிக்கல் சிங்கார வேலவனும், அயில் வேலும்


அறங்கொள் உமையோடு அயில் ஏந்திய எம் ஐயனொடுந்தான் அமர்கின்ற திறங்கொள் கோலம் கண்டு களிக்கும் மறங்கொள் எயில் மூன்றெறித்தான் கனகமலையான் அடியார் மயல் தீர்ப்பான் பிறங்கும் சடைப் பிரானை முதற்கண் போற்றி, “அழகிய சிக்கல் சிங்கார வேலனும், அயில் வேலும்” என்ற தலைப்பை மேற்கொண்டு தமிழகத்தின் தெய்வத்திருத்தலங்களில் ஒன்றான சிக்கலைப் பற்றிச் சிந்திப்போம்...
1. சிக்கலுக்கும், வெண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்? வெண்ணெய் எந்த சிக்கலில் சிக்கியது? இந்த சிக்கலை அவிழ்க்க வாருங்கள் போவோம் சிக்கலுக்கு. சிக்கல் திருவாரூர் - நாகப்பட்டினம் வழித்தடத்தில் அமைந்துள்ள திருத்தலமாகும்.

2. சிக்கலென்றவுடன் சிங்காரவேலவர் நினைவுக்கு வந்தபோதிலும் , மூலவர் முருகர் அன்று! அரி விரிஞ்சர் தேட அரிய தம்பிரானாம் எம்பிரான் சிவ பெருமான் தான் ‘திருவெண்ணெய்நாதர்’(வட மொழியில் நவநீதேஸ்வரர்) என்ற பெரில் இருந்து அருள் பாலிக்கிறார். அம்பிகையின் பெயர் ‘வேலொண்கண்ணி’(வேல்+ஒண்+கண்ணி). கற்றைச் சடையான் கண்மூன்றுடையானுக்கும், அவர் தம் பாகத்திருக்கும் உடையாளுக்கும், மேற்கூறிய தலப்பெயர்கள் வர சுவையான காரணங்கள் உண்டு.

3. இப்பொழுது, வெண்ணெய் சிக்கலில் மாட்டிக்கொண்ட வரலாற்றைக் கேட்போம். வசிட்ட முனிவர் இத்தலத்தில் சிவ பெருமானை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வந்தார். பராபரன் அவரது கசிந்துருகும் பக்தியை மெச்சி, காமதேனுவை முனிவருக்கு வழங்கி மகிழ்ந்தார். காமதேனுவின் பாலிலிருந்து கடையப்பட்ட வெண்ணெயைக் கொண்டு இலிங்கம் பிடித்து பூசனை செய்தார் வசிட்ட மாமுனி. அவருடய யோக வலிமையினால் வெண்ணெயிலிங்கம் உருகாமல் உறுதியாய் நின்றது. பூசை முடிந்து வெண்ணெயை அள்ள முயன்றபோது, அகற்ற முடியாமல் வெண்ணெய் பீடத்துடன் “சிக்கி” நிலைத்து நின்றது. அதனால் தான் இத்தலத்திற்கு “சிக்கல்” என்றும், மூலவருக்கு “திருவெண்ணெய்நாதர்” என்ற பெயர்கள் வழங்கியதாக வரலாறு சாற்றுகின்றது. கோச்செங்கணான் என்ற சோழ மன்னன் எழுப்பிய எழுபது கோயில்களுள் இதுவும் ஒன்று.

4. அம்பிகைக்குத் தேன் தமிழில் “வேலொண்கண்ணி” என்று பெயர் வரத் தனிக்காரணம் ஏதும் தேவையில்லைதான், புவனம் முழுமையும் இலக்காக்கி நோக்கும் அகிலாண்ட நாயகியின் விழிக் கூர்மையும், சக்தி வாய்ந்த பேரொளியும், பெயரை நியாயப்படுத்தப் போதுமானதேயாகும். மேலும் “திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர் செருவடங்க” சக்திவேலை அன்னை அபிராமி அழகு தமிழ் அறுமுகனுக்கு வழங்கிய பெருநிகழ்வு இங்குற்றது.

5. அருணகிரியார் திருப்புகழிலும், வேல்விருத்தத்திலும் போற்றித் துதிக்கும் நிகழ்வாகும்.

“பம்பரமே போலாடிய
சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி கரசூலி
பங்கமிலா நீலி மோடி
பயங்கரி மாகாளி யோகினி
பண்டு சுராபான சூரனொடு எதிர் போர் கண்டு
எம்புதல்வா வாழி வாழி
எனும்படி வீறான வேல் தர
என்றும் உளானே மநோகர வயலூரா” - திருப்புகழ்.

“சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
திரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொன் திருக்கை வேலே” - வேல் விருத்தம்.

6. வேலின் பெருமையையும், மகிமையையும் பற்றி சற்று சிந்திப்போம். எல்லாம் வல்ல இறைவனுக்கு ஆயுதம் எதற்கு? - பகுத்தறிவுவாதிகளின் நியாயமான கேள்வி. வேல், சூலம், சக்கரம் முதலியவை சூட்சுமங்களை, நுண்பொருள்களை உருவகப்படுத்தும் அடையாளச் சின்னங்களாம். கணிதத்திலும், அறிவியலிலும், பொறியியலிலும் ‘Symbols’ - அடையாளக் குறியீடுகள் இல்லாமல் விளக்கமுடியாது; தேர்வில் வினாக்களுக்கு விடை காணும் முயற்சி கிடைத்த நேரத்தை வீணாக்குவதில் முடியும். கந்தனின் வேல் ஞானத்தையும். சிவனின் சூலம் முக்காலத்தையும், மாலின் சக்கரம் காலச்சுழற்சியையும் குறிக்கும் குறியீடுகளாம். சிங்கார வேலனை அலங்கரிக்கும் நோக்குடன் அருணகிரியார் பாடிப்பரவிய வேலொடு கூடிய அடைமொழிகள் பலவாகும். கந்தர் அனுபூதியிலும், கந்தர் அலங்காரத்திலும் கையாளப்பட்ட சில சொற்றொடர்களைக் காண்போம் :

• கைவாய் கதிர்வேல்
• முதுசூர்பட வேல்
• அடி அந்தமிலா அயில்வேல்
• கிரிவாய் விடு விக்ரமவேல்
• வினை ஓடவிடும் கதிர்வேல்
• குன்றம் திறக்கத் துளைக்கும் வைவேல்
• வையிற் கதிர்வடிவேல்
• குன்றம் எட்டும் கிழித்தோடும் வேல்
• பொங்கார வேலையில் வேல்
• வேலுக்கு அணிகலம் வேலையும், சூரனும், வெற்பும்
• சாடும் சமரத் தனிவேல்
• பயந்த தனிவழிக்குத் துணை வடிவேல்
• வாரிதி வற்றச் செற்ற நெடுவேல்.

7. வேல் ஞானத்தின் குறியீடென்றால், சூரன், கிரௌஞ்சம், கிரி, குன்றம், வெற்பு, வேலை, வாரிதி முதலியவை எவற்றைக் குறிக்கின்றன?

• சூரபன்மன். . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .ஆணவமலம்
• தாரகாசூரன். . . . . . . . . . .. . . . . . . . . . . . . . மாயாமலம்
• சிங்கமுகசூரன். . . . . . . . . . . . . . . . . . . . . . .கன்மமலம்
• கிரௌஞ்ச மலை, கிரி, குன்றம், வெற்பு. . . . . .வினைத் தொகுதி.
• வாரிதி, வேலை, கடல் . . . . . . . . . . . . . . . . .பிறவித்துயர்

ஆணவம் எனப்படும் சூரன் நம்முள்ளிருந்து, மாயாமலம், கன்மமலமாகிய இரு இளவல்களின் துணையொடு நம்மை ஆட்டிப்படைத்து பன்னெடுங்காலமாகக் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வருகிறான். வினைத்தொகுதிகளால் பீடிக்கப்பட்டு, பிறவி என்ற வாழ்க்கைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். பேராசை எனும் பிணியில் பிணிபட்டு, மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து, இல்லே எனும் மாயையில் உழன்று கொண்டிருக்கின்றோம்.. இந்த சுழற்சியிலிருந்து விடுபட வழியுண்டா என்று ஏங்குபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் அருணகிரியார். அவர் பாழ்வாழ்வு எனும் இப்படு மாயையில் சிக்கித்தவித்து உயிர்த்தியாகம் செய்யும் தருணத்தில் குருமலையின் மருவு குருநாதன், உம்பர்தம் பெருமாள் தடுத்தாட்கொண்டார். அனுபவப்பட்டவர்; நம்மை மீட்கும் உபாயமும், வழியும் அவருக்குத் தெரியும். கந்தர் அனுபூதியும், கந்தர் அலங்காரமும் நம்மை உய்வித்து நற்கதிக்கு இட்டுச்செல்லும் நெறி முறைகளாகும்.

வெல்வது வேல், ஆதலால் வெற்றிவேல்; அஞ்ஞான இருளைப் போக்குவதால் சுடர்விடும் கதிர்வேல்; மாயையை ஒழிப்பதால் வைவேல்; வினைகளை ஓடவிடுவதால் தனிவேல். மேலும், திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன், நமதுளத்தில் உறை குகனுடைய வேல் :
• இந்திரன் கால்களிலிட்ட தளைகள் தெறிக்க வரமாகும்..
• நக்கீரப் பெருமான் அடைபட்டிருந்த மலைக்குகையை இடித்து வழிகாட்டும்.
• தேவர், முனிவர், இந்திரன், பிரமன், நரர் தமக்குமுறும் இடுக்கண் வினை சாடும்.
• முருகனைத் துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர் நினைத்தால் அவர் குலத்தை முதலறக் களையும்.
• தனித்து வழி நடக்கும் அடியவர், இடத்தும், வலத்தும், இருபுறத்தும், அருகடுத்தும், இரவு பகல் துணையதாகும்.

திருமுருகாற்றுப்படை அருளிய நக்கீரதேவநாயனார் சாற்றுவது : “சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல்”, “இருகை ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப”,

“வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றுந்
தொளைத்த வேல்உண்டே துணை”.

8. இவ்வளவு பெருமையும், மகிமையும் வாய்ந்த சக்திவேலை சொக்கேசர் பிள்ளைக்கு சொக்கும் வடிவுடைநாயகி ஆண்டுதோறும் வழங்கும் காட்சியை சிக்கலில் பார்ப்பதுதான் சிறப்பு. பன்னிரண்டு படிகள் ஏறி கோயிலுக்குள் நுழைகின்றோம். எந்தை வெண்ணெய்ப்பிரானின் கோயில்தானென்றாலும், “இங்கே எனக்குத் தனி முக்கியத்துவம்” என்று பறை சாற்றுவது போல், அறுமுகவனின் பன்னிரு திருக்கரங்களை அடையாளப்படுத்தும் வகையில் பன்னிருபடிகள் போலும்.

“வாங்கும் எனக்கு இருகை; ஆனால் அருளை
வழங்கும் உனக்குப் பன்னிருகை. . . . . . .. . . .”

என்று பாடுவார் அன்பர் ஊத்துக்காடு வேங்கடசுப்பைய்யர்.

படிகள் ஏறும்பொழுது, அத்தனை கரங்களும் நம்மைத் தாங்கி, அணைத்து, அழைத்து வரவேற்பதைப்போல் தோன்றுவது பிரமை அல்ல, உண்மை. முதல் படிக்கருகே சுந்தர விநாயகர். தம்பிக்குச் சளைத்தவன் நானல்ல என்ற மிடுக்கோடும் கம்பீரத்தோடும் நம்மைக் கவர்ந்திழுக்கிறார். கருவறையில் வெண்ணெய்நாதரை தரிசிக்கிறோம். உத்சவமூர்த்தமாக - ஆறுமுகங்களும், ஈறாறு கரங்களும், வள்ளி தேவானை இருபுறத்தும், மயில்மேலுறை கோலம் கண்கொள்ளாகாட்சி.

9. கந்தர் சஷ்டிக்கு முன்தினம், முருகவேள் அன்னை வேலொண்கண்ணியிடம் ஓடோடிச்சென்று வேல் பெற்றுத் திரும்புவார்.. ஓடிய ‘இளைப்பில்’ வியர்வைத்துளிகள் முத்து முத்தாய் முத்துக்குமரனின் திருமுகத்தில் அரும்பித் துளிர்க்கும் அற்புதக் காட்சியைக் காணத் திரளும் பக்தர்கள் எண்ணிலடங்கார். ஆடிக்கிருத்திகை, கந்தர் சஷ்டி, தைப்பூசம் போன்ற சிறப்பு விழாநாட்களில் தங்கவாகனங்களில் வீதிஉலா வருவார்.

சிங்கார ரூபமயில் வாகன நமோநம
கந்தா குமார சிவதேசிக நமோநம
சிந்தூர பார்வதி சுதாகர நமோநம
சோதி கதிர் வேலவ நமோநம
கங்காள வேணி குருவானவ நமோநம

என்றோதி வேலே விளங்கு கையான் செய்ய தாளினில் வீழ்ந்து இறைஞ்சி, விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வை அருள வேண்டி , சமரிடை மெத்தப் பொங்காரமாய் வரும் அசுரரை வெட்டிச் சங்காரமாடிய, அழகிய சிக்கற் சிங்கார வேலவரை எப்போதும் சிந்தித்திருப்போம்.



No comments:

Post a Comment